திருச்சி பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி பள்ளி ரூ.69 கோடி மதிப்பீட்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயில்வதற்காக தரைதளம் முதல் நான்காம் தளம் வரை வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டது. 

இந்த அரசு மாதிரி பள்ளியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலின் மகள் பிரித்திகா என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பயாலஜி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தவர் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் அரசு மாதிரி பள்ளி வளாகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவம் அறிந்த துவாக்குடி போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகராத்தினத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகராத்தினம், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் மாணவி எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து சகமாணவியரிடமும் ஆசிரியர்களிடமும் விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும் மாணவி இறந்தது குறித்து அவரது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி