முசிறி: தனியார் பார்சல் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து ரதிமீனா பார்சல் சர்வீஸ் நிறுவனத்தின் லாரி திருச்சி நோக்கி வந்துள்ளது. லாரியை உறையூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். முசிறி பைபாஸ் சாலையில் சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக, போக்குவரத்து சாலையின் ஒரு பக்கமாக விடப்பட்டது. இதில் சாலையின் ஓரத்தில் வந்த பார்சல் லாரி மீது மின்கம்பி உரசியுள்ளது. 

இதில் எதிர்பாராத விதமாக பார்சல் லாரியில் பொருட்கள் இருக்கும் பகுதியில் தீப்பிடித்தது. உள்ளே இருந்த ஸ்கூட்டி மற்றும் ஜவுளி பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கியது. லாரியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி டிரைவர் உயிர் தப்பினார். லாரியில் தீப்பற்றி எரிவதை கண்ட அப்பகுதியினர் தீ மேலும் பரவாமல் தடுத்ததுடன் முசிறி தீயணைப்பு மற்றும் மீட்புப்படைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். 

பார்சல் லாரியில் இருந்த டிராக்டர் டயர் உள்ளிட்ட விலை உயர்ந்த பல்வேறு பொருட்கள் தீ விபத்தில் சேதம் அடையாமல் பாதுகாக்கப்பட்டதுடன் லாரியும் அதிர்ஷ்டவசமாக தப்பியது. சம்பவம் குறித்து முசிறி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி