திருச்சி: அமைச்சர் நேருவின் கார் டிரைவர் சாலை மறியல்- வீடியோ

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் 40. இவர் நகராட்சி வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஏவூர் கிராமத்தைச் சேர்ந்த தாஸ் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் குடிபோதையில் அய்யம்பாளையம் சென்று ஐயப்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது குடும்பத்தினரிடம் தகாத வார்த்தைகளைப் பேசி தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து இரவு சுமார் 10 மணி அளவில் ஐயப்பன் முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்ததாக தெரிகிறது. புகாரைப் பெற்ற போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருவரையும் கைது செய்யவில்லை என கூறி உறவினர்களை திரட்டி திருச்சி நாமக்கல் சாலையில் இரவு 11 மணி அளவில் ஐயப்பன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தமிழக அமைச்சரவையில் பிரதானமாகத் திகழும் நகராட்சித் துறை அமைச்சர் கார் டிரைவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் புகார் கொடுத்த சுமார் ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என இரவு நேரத்தில் சாலை மறியல் செய்து அடாவடி செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி