திருச்சி: கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்; அன்பில் மகேஸ்

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
அவர் கூறியது: மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழக கல்வித் துறைக்கு ரூ. 2,158 கோடியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். மத்திய அரசின் நிதி விடுவிக்கப்படாததால் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ. 19 கோடியில் அளிக்கப்பட்டு வந்த தற்காப்புப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடர இயலவில்லை. 

எனவே மாணவர், மாணவிகளின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம். மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்க மத்திய அரசு வற்புறுத்துகிறது. இருமொழிக் கொள்கையால் தமிழகத்தில் என்ன தீங்கு ஏற்பட்டுள்ளது? இஸ்ரோவில் பணிபுரியும் நாராயணன் உள்ளிட்ட பலரும் தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள்தான். 

உலக நாடுகளில் தமிழ்வழி பயின்ற மாணவர்கள் பல சாதனைகளை புரிகின்றனர். எனவே சம்பந்தமே இல்லாமல் மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்க வற்புறுத்தக்கூடாது. இன்னொரு மொழிப்போரை தூண்டப் பார்க்கின்றனர். மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு சொந்த நிதியில் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குகிறது. மத்திய அரசிடமிருந்து கல்விக்கான நிதியை பெற தமிழக முதல்வருடன் கலந்து பேசி நீதிமன்றத்தை அணுகுவதா வேண்டாமா என முடிவெடுப்போம் என்றார் .

தொடர்புடைய செய்தி