பேருந்துகள் பயன்பாடு, டயர்களின் அதிக உழைப்புத் திறன், எரிபொருள் சிக்கனம், கிராமப்புற, நகர்ப்புற பேருந்து செயல்பாடுகளுக்காக இந்த விருதுகள் கிடைத்துள்ளன. மேலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து முனையமாக பஞ்சப்பூரில் ரூ. 492.55 கோடியில் புதிய முனையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகளை அறிய கர்நாடக மாநில அரசின் போக்குவரத்துக் கழக இயக்குநர் கே. நந்தினிதேவி, வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் எம். பிரியங்கா ஆகியோர் திருச்சிக்கு புதன்கிழமை வந்தனர்.
தொடர்ந்து, திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள பேருந்து உதிரிப் பாகங்கள் புதுப்பிக்கும் பணிமனையை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, பஞ்சப்பூருக்கு சென்று அங்கு கட்டமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையம், சரக்கு வாகன முனையம், பல்வகை பயன்பாட்டு வசதிக்கான சேவை மையம், முனையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள உள்கட்டமைப்பு பணிகளையும் பார்வையிட்டனர்.