இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள கே. ராமநாதபுரம் காலனி தெருவைச் சேர்ந்த ஊர்க்காவலன் மகன் வனராஜ் (45). இவர் துரைச்சாமிபுரம் பஞ்சாயத்தில் குடிநீர் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜாராம் மகன் டிரைவர் முத்துராமன் (27) என்பவருக்கும் இடையே மோட்டார் சைக்கிளில் மோதி கீழே விழுந்தது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் (ஜன.1) வனராஜ் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற பின்னர் வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த முத்துராமன் அவரை வழிமறித்து அவதூறாகப் பேசி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வனராஜ் அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முத்துராமனை கைது செய்தனர்.