தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாடளாவிய கருத்துப்பட்டறை நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் "பெர்ல் அக்வா” என்பது தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை திட்டமாகும்.
இந்த ஆண்டிற்கான கருத்துப்பட்டறையின் கருப்பொருள் "மீன்வளர்ப்பில் நீர்த்தர மேலாண்மைக்கான புதிய உத்திகள்” ஆகும். பாரம்பரிய தீபம் ஏற்றி விழா இனிதே துவங்கியது. உதவிப் பேராசிரியரும் அமைப்புச் செயலாளருமான து. மணிமேகலை வரவேற்புரை வழங்கினார். இந்நிகழச்சியின் போது பெர்ல் அக்வா 2025-க்கான கருத்தரங்கு கட்டுரை தொகுப்பு மலர் வெளியிடப்பட்டது.
சென்னை ஷெங்லாங் பயோடெக் மற்றும் பான் இந்தியா தொழில்நுட்ப சேவைத் தலைவர் அ. குமரேசன் சிறப்புரை வழங்கினார். அவர் தனது உரையில், முதுகலை மற்றும் பட்டப்படிப்பை பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது ஆராய்ச்சிக்கென புதிய ஆராய்ச்சித் தலைப்புகளைத் தேர்வு செய்யவும், உயர்ந்த நிலையை அடைய தங்களது விளக்கக் காட்சித் திறனை மேம்படுத்தவும் ஊக்கப்படுத்தினார்.