தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நான் முதல்வன் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன், நவம்பர் 13 முதல் 20 வரை ஒரு வாரகால ‘படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி’யை நடத்துகிறது. இந்தப் பயிற்சியின் தொடக்க விழா தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 விசைப்படகு மீனவர்கள் பங்கேற்றனர். பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ச. மாரியப்பன் வரவேற்புரை ஆற்றினார், மேலும் துறைத் தலைவர் த. ரவிக்குமார் பயிற்சி குறித்து விளக்கவுரையாற்றினார்.