தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மயிலோடையை சேர்ந்தவர் வெயிலுமுத்து. ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. இவருடைய மகன் மாரியப்பன் (47). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மண்டல தொண்டர் அணி மெய்காப்பாளராக இருந்து வந்தார். இவருடைய மனைவி ரேவதி போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. மாரியப்பன் மயிலோடையில் தனியாக வசித்து வந்தார். அடிக்கடி மகன், மகளுக்கு செல்போன் மூலம் பேசி தன்னுடன் வந்து வசிக்குமாறு கூறிவந்துள்ளார். ஆனால், அவர்கள் வரமறுத்ததாக கூறப்படுகிறது.
இதில் மாரியப்பன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவர், வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தொங்கினார். உறவினர்கள் மீட்டு அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குரும்பூர் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.