தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமைந்துள்ள சடையன்கிணறு கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இருந்த கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக கொடிக் கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. புதிய கொடிக் கம்பம் அமைப்பதற்கு சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமாரை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கத் தமிழன், மாவட்ட செயலாளர் டிலைட்ரா ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகளின் இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக இன்று தைபூசத்திற்கு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை உடனடியாக அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது காவல்துறையினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர்.