தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த இருந்த புளி, சிகெரட் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதி வழியாக படகுகள் மூலம் இலங்கைக்கு போதைப் பொருட்கள், பீடி இலைகள், மளிகைப் பொருட்கள், மருந்து மாத்திரைகள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. 

இதைத் தடுக்க மாவட்ட காவல்துறையினர் மற்றும் க்யூ பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டினம் கடற்கரைக் கிராமப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதாக க்யூப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதாவிற்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரது தலைமையிலான காவல்துறையினர் சோதனை செய்தனர். 

இதன்போது கடற்கரைப் பகுதியில் இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான சன் டிடிஎச் செட்டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் டிவி செட்டாப் பாக்ஸ் 395 பாக்ஸ்களும், 15 மூட்டைகளில் இருந்த 450 கிலோ குழம்புக்குப் பயன்படுத்தப்படும் புளியும், மேலும் இங்கிலாந்து நாட்டுத் தயாரிப்பான மான்செஸ்டர் என்ற பிராண்டின் சிகரெட்டுகள் ஒரு லட்சம் எண்ணிக்கையில் கைப்பற்றப்பட்டன. மேலும் இந்தக் கடத்தலில் ஈடுபட்டுத் தப்பி ஓடிய கும்பலைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி