வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடியில் மழை வெளுத்து வாங்குகிறது. மேலும், தாமிரபரணி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கலியாவூர் முதல் புன்னக்காயல் ஆற்றங்கரை பகுதிகளில் செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இன்று (டிசம்பர் 13) காலை முதல் லேசான மழை பெய்து வந்தது. தொடர்ந்து மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால், மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.