தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரர்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவதி வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுவரும் ஏஏயொய்பிஎச்எச் குடும்ப அட்டைதாரர்கள் மொத்தம் 9,27,955 பேர் உள்ளனர். இவர்களில் இதுவரை 7,94,044 பேர் மட்டுமே கைரேகை பதிவு செய்துள்ளனர். மீதம் 1,33,547 பேர் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். அரசின் சலுகைகளைத் தொடர்ந்து பெற தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை பதிவு செய்வது அவசியம். வெளிமாவட்டங்களில் தங்கியிருப்பவர்கள், பள்ளி, கல்லூரிகளில் படித்துவரும் மாணவர், மாணவிகள் தாங்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று குடும்ப அட்டை எண்ணைத் தெரிவித்து தங்கள் கைரேகையை பதிவு செய்துகொள்ளலாம் என்றார்.