தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளை உடனுக்குடன் அதிகாரிகள் சீரமைத்து வருகின்றனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்துவதில்லை. குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தற்போது அரசு மருத்துவமனை செவிலியர் வீட்டிலிருந்து வேலைக்குச் செல்லும்போது பிரதான நெடுஞ்சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நெடுஞ்சாலைத்துறை பணிகளை விரைவாகச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.