தூத்துக்குடி: தொழிலாளர் துறை அதிகாரி கார் கண்ணாடி உடைப்பு

தூத்துக்குடியில் தொழிலாளர் துறை அதிகாரியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி பூபாலராயர்புரம் 3-வது தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் பிரேம்குமார் (45). இவர் தொழிலாளர் நலத்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3-ந்தேதி புதியம்புத்தூர் சில்லாநத்தத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முறையாக தொழிலாளர் துறையில் முத்திரையிடப்படாத எடை எந்திரம் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உதவி ஆய்வாளர் பிரேம்குமார், அந்த எடை எந்திரத்தை பறிமுதல் செய்து தொழிலாளர் நல அலுவலகத்துக்கு கொண்டு சென்று வைத்துள்ளார். 

இதனை தொடர்ந்து, சம்பவத்தன்று பிரேம்குமார் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜதுரை, திருமணி ஆகியோர் தகராறு செய்து மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் அங்கு நின்ற பிரேம்குமாரின் கார் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி