தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இரவு 8. 40 மணிக்கு புறப்பட்டு செல்லும். இன்று ரயில் பெட்டியை 4வது பிளாட்பாரத்தில் இருந்து 1வது பிளாட்பாரத்தில் எடுத்துச் செல்வதற்கு முயன்ற போது எஸ்7 ரயில் பெட்டியில் மின் கோளாறு காரணமாக சக்கரங்கள் இயங்கவில்லை. இதனால் ரயிலை எடுக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து அந்த பெட்டியை மட்டும் கழட்டி விட்டுவிட்டு அதற்கு பதிலாக புதிய ரயில் பெட்டி மாற்றி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலை முதல் பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்தனர். நேரம் ஆக ஆக ரயில் பயணிகள் கூட்டம் அதிகமானதால் பயணிகள் அனைவரும் ரயில்வே மேலாளர் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் ரயில்வே அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பின்பு 8. 35 மணிக்கு முதல் பிளாட்பாரத்திற்கு ரயில் வந்ததும் பயணிகள் ஏறினார்கள். அப்போது குளிர்சாதன பெட்டியில் ஏசி ஓட வில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர் இதைத் தொடர்ந்து மெக்கானிக் வரவைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் பழுதுபார்க்கப்பட்டன. பின்னர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 25 நிமிடம் தாமதமாக 9. 05 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சென்றது.