தூத்துக்குடி: அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய 3 பேர்; விரட்டிப் பிடித்த போலீஸ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் நேற்று நள்ளிரவு 3 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், வேன் மற்றும் வீட்டு ஜன்னல்களை அடித்து நொறுக்கியது மட்டுமின்றி வேன் உரிமையாளர் சங்கர் நாராயணன் என்பவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. 

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற கோழி கார்த்திக் (21) மற்றும் இரண்டு சிறுவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் பதுங்கி இருப்பதாக கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் அங்கு சென்றபோது, மூன்று பேரும் போலீசாரை பார்த்து தப்பி ஓடி உள்ளனர். சிறுவர்கள் இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்த நிலையில், கார்த்திக் என்ற கோழி கார்த்திக் தப்பி ஓட முயன்றபோது கால் தடுக்கி கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். கீழே விழுந்து காயம் அடைந்த கார்த்திக் என்ற கோழி கார்த்திக்கை சிகிச்சைக்காக போலீசார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி