தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, வேஷ்டி மற்றும் சேலைகள் அடங்கிய தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் வழங்கப்பட்டுவருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் பணி கடந்த 9ம் தேதி தொடங்கியது. ரேஷன் ஊழியர்கள் டோக்கன் முறையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பை விநியோகித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளை ஜன.14 பொங்கல் திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், முழுவீச்சில் நடைபெற்றுவரும் இந்த சிறப்புப் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி இன்று மாலையுடன் முடிக்கப்படும் என தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருநாள்ளாறு சனீஸ்வரபகவான் கோயிலில் குடும்பத்துடன் நேற்று சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதைத் தெரிவித்தார். எனவே, இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறாத, பொதுமக்கள், விரைந்து ரேஷன்கடைகளுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.