நீடாமங்கலத்தில் பேருந்தில் இருந்து விழுந்த மாணவி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் 13 வயது மகள் சுகந்தி. இவர் அருகில் உள்ள முன்னவாழ்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் சுகந்தி அரசு பேருந்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். பேருந்து கிருஷ்ணாபுரம் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது மாணவி பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். 

மாணவி விழுந்ததை கண்டு கொள்ளாமல் அரசு பேருந்து வேகமாக அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளது. இந்த நிலையில் மாணவியின் தலை மற்றும் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் மாணவி சுகந்தியை மீட்டு உடனடியாக நீடாமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் உயர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 விபத்துக்கான காரணம் குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது மாணவி பேருந்தில் இருந்து தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி