மேலும், அதற்குரிய அலுவலக பணியாளர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அரசின் இந்த அலட்சிய போக்கால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யக்கூடிய சாக்குகள் எல்லாம் வந்து இறங்கியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து வைத்துள்ளனர். விவசாயிகள் அறுவடை செய்து கொட்டி வைத்துள்ள நெல் தேங்கி இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் பணியாளர்களை இதுவரை அரசு நியமிக்காததால் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்ட நெல்மணிகளை இரவு பகலாக பாதுகாக்க விவசாயிகள் தங்களது சொந்த பணத்தில் காவலர் ஒருவரை நியமித்து, பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகவே உடனடியாக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் உரிய அலுவலரை நியமித்து விவசாயிகளின் துயர் துடைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.