திருவாரூர்: இளையோர் திருவிழாவை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

கொரடாச்சேரி அருகே அம்மையப்பனில் இன்று (டிசம்பர் 18) நடைபெற்ற இளையோர் விழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் நாட்டின் மிகப்பெரிய சொத்தான இளைய சமுதாயம் தனது முன்னேற்றத்திற்கான பாதையினை தெளிவாக வகுத்துக் கொண்டு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு உயர்ந்த இடத்தை அடைவதை இலக்காக கொள்ள வேண்டும் என்றார். 

இதற்காக மாணவ, மாணவிகளுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு தொழில் திறன் பயிற்சிகளை வழங்கி வருவதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். நவீன வருகையான ஸ்மார்ட்போன்களையும், சமூக வலைதளங்களையும் நன்மைக்காக மட்டும் பயன்படுத்திட அவர் கேட்டுக் கொண்டார். அதேபோல இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் தேசப்பற்றை மையப்படுத்திய பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, ஓவியப்போட்டி ஆகியவையும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. 

மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான இளையோர் திருவிழாவில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டியில் கலந்து கொள்வார்கள் எனவும் அதனைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் அவர்கள் பங்கேற்பார்கள் என துணை இயக்குனர் திருநீலகண்டன் கூறினார். மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி