மன்னார்குடி: அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

டாக்டர் அம்பேத்கர் அவர்களை, அரசியல் சாசனத்தின் 75ம் ஆண்டு மீதான விவாதத்தின் போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்றத்தில் இழிவுபடுத்தி பேசியதை கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக மன்னார்குடியில் நேற்று (டிசம்பர் 23)அரசியல் சாசனத்தை மதவெறி பிடித்த சங்பரிவார் கூட்டத்திடமிருந்து அரண்போல் நின்று பாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதன் ஒரு பகுதியாக மன்னார்குடியில் அம்பேத்கர் அறிவாலயம் வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை முன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவாரூர் மையம் சார்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்வுக்கு மாவட்ட அமைப்பின் பொருளாளர் இரா. இயேசுதாஸ் தலைமை வகித்தார். 

மாவட்ட செயலாளர் திரு கே. தமிழ்மணி உறுதிமொழியை முன்மொழிந்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், எல்ஐசி ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம், எல்.ஐ.சி ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உறுதிமொழி ஏற்றனர். நிறைவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மன்னார்குடி கிளை பொருளாளர் கே.வி. பாஸ்கர் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி