மன்னார்குடி புனித அந்தோனியார் ஆலய 237வது தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அந்தோனியார் கோவில் தெருவில் உள்ள அந்தோனியார் ஆலய 237வது ஆண்டு விழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் ஜபமாலை வழிபாடு நடைபெற்ற நிலையில் நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. கண்கவர் வானவேடிக்கைகளுடன் நடைபெற்ற விழாவில் புனித அந்தோனியார், சம்மன்ஸ், ஜபஸ்தலர், லூர்து மாதா, வனத்துச் சின்னப்பர் உள்ளிட்ட சொருபங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
முன்னதாக கோவில் முன்பாக அமைக்கப்பட்ட பந்தலில் வானதூதர், தேவதைகள் மலர்மாலைகளை புனித அந்தோனியார், லூர்து மாதா உள்ளிட்ட சுவாமிகளுக்கு அணிவிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. மன்னார்குடியின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் பவனியில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஹிந்துக்களும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.