திருவொற்றியூர்: வீடு புகுந்து ரவுடி வெட்டிப் படுகொலை

திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (19). இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி என 17க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்தார். சிறைக்குச் செல்லும்போது கீழே விழுந்ததால் இவருக்கு மாவுகட்டு போடப்பட்டிருந்தது. 

சிறையிலிருந்து வெளியே வந்ததும் இவரது தாயார் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது உள்ளே ஆகாஷை விட்டுவிட்டு பூட்டிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இப்படி பூட்டிவிட்டு பூட்டின் சாவியை யாருக்கும் தெரியாமல் வாசலிலிருக்கும் குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்து வந்ததாகவும் தெரிய வருகிறது. 

வழக்கம்போல் தாய் ஜெயா வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்க்கும்போழுது தனது மகன் ஆகாஷ் படுகொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போலீசார் ஆகாஷின் உடலைக் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவரும் நிலையில் முதற்கட்டமாக மூன்று பேர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. பூட்டிய வீட்டிற்குள் தலைமறைவாக வாழ்ந்துவந்த ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி