திருவள்ளூர்: வங்கியில் கடன் கட்ட முடியாததால் தற்கொலை முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் அருகே அதிகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி மகாலட்சுமி தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிகிறார். பாஸ்கர் அதிகத்தூர் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான ஒரு கிரவுண்ட் நிலத்தை சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அகம் ஹோம் பைனான்ஸ் வங்கியில் அடமானம் வைத்து 9 லட்சத்து 50,000 ரூபாய் பணத்தை கடந்த 2021ம் ஆண்டு கடனாகப் பெற்றுள்ளனர். கடந்த 2023 டிசம்பர் வரை மாதம் 25 ஆயிரம் ரூபாய் தவணைத் தொகையாகக் கட்டி வந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாஸ்கருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால் மாதத் தவணையைக் கட்ட முடியாமல் திணறியுள்ளனர். 

இதற்கிடையில் வங்கியிலிருந்து வந்த ஊழியர்கள் மாதத் தவணையைக் கட்ட கூறி நிர்பந்தித்து வந்ததால் மாதத் தவணையைக் கட்ட முடியாமல் இருந்த நிலையில் ஊழியர்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளைப் பேசியதால் பாஸ்கர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைத் தொடர்ந்து வங்கித் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டைக் காலி செய்து தரும்படி தற்போது தொடர்ந்து வங்கித் தரப்பில் தொல்லை தந்து வந்ததால் மனஉளைச்சல் அடைந்த மகாலட்சுமி வீட்டில் பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி