திருவள்ளூர்: தொழிற்சாலையில் தொழிலாளி மீது ரோலிங் மோட்டார் விழுந்து பலி

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பணியில் இருந்த தொழிலாளி மீது ரோலிங் மோட்டார் விழுந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் காரணிசாம்பெட்டை பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதுடைய மணிகண்டன் இவருக்கு மீனா என்ற மனைவியும், லிகித் என்ற 3 வயது மகனும், பவிஸ்ரீ என்ற ஒரு மாத குழந்தையும் உள்ளனர். இவர் தந்தை முனுசாமி செய்து வந்த கோலமாவு உப்பு வியாபாரத்தை அதிகாலை எழுந்து மணிகண்டன் கிராம கிராமமாக விற்பனை செய்துவிட்டு, பின்னர் அதே பகுதியில் இரும்புத்தூண் தயாரிக்கும் விஜயா மெட்டல் தனியார் தொழிற்சாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.

வழக்கம் போல் இன்று (மார்ச் 21) மணிகண்டன் கோலமாவு வியாபாரத்தை செய்துவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். பணியில் இருந்த அவர் மீது ரோலிங் மோட்டர் விழுந்து பலியானார். அதைத் தொடர்ந்து அவரது உடலை திருவள்ளூர் தாலுகா போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொழிற்சாலையில் கடந்த ஒரு வாரம் முன்பு தான் ரோலிங் மோட்டார் பழுது சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளியை பணி செய்ய வைத்ததாலே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி