திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெறும் மூன்று நாள் தெப்ப உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹிருதாப நாசினி குளத்தில், உற்சவர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளி குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நோய் தீர்க்க வேண்டிக் கொண்டு பெருமாளை தரிசித்தால் நோய் தீரும் என்ற நம்பிக்கையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்த தெப்பத் திருவிழாவில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.