நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1,000 மரக்கன்றுகள்

தமிழ்நாடு – ஆந்திரா இடையிலான போக்குவரத்து சேவையில் திருத்தணி – சித்தூர் மாநில நெடுஞ்சாலை முக்கிய பங்கு வகிக்கிறது. இச்சாலையில், 24 மணி நேரமும் வாகன நெரிசல் நிறைந்திருக்கும். இதனால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகன விபத்தை தடுக்கும் வகையிலும் திருத்தணி – சித்தூர் சாலையிலிருந்து வெடியங்காடு வரை திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 45 கி. மீ தூரம் 2 வழிச் சாலையை 4 வழி சாலையாக அகலப்படுத்த ரூ. 150 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக, திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இரண்டு பகுதிகள் சேர்த்து 10 கி. மீ தூரம் ரூ. 65 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி, தார்சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இச்சாலையை அகலப்படுத்த சாலைக்கு இருபுறமும் இருந்த மரக்கன்றுகள் வெட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, வாகனங்களில் சென்று வரும் வாகன ஓட்டிகள், பயணிகள் பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில், சாலைக்கு இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1, 000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருவள்ளூர் கோட்ட பொறியாளர் சிற்றரசு பங்கேற்று, சாலையின் இருபுறமும் 1, 000 மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி