திருவேற்காடு: கடைக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் (VIDEO)

திருவேற்காடு காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் மகபூப் பாஷா. இவர் வீட்டின் முன்பு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் அவரது இறைச்சி கடைக்கு வந்த நபர் ஒருவர் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறைச்சி வாங்க வந்துள்ளார். அப்போது வாகனம் தனது வீட்டின் முன்பு இருப்பதாக இறைச்சிக் கடையின் பக்கத்து வீட்டுக்காரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

அதேபோல் பக்கத்து வீட்டுக்காரர்களான தேசிய ராஜ், இன்பராஜ், யுவராஜ் உள்ளிட்ட 5 பேர் மகபூப் பாஷா அவரது மகன் அஷ்ரப் அலி ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பாஷாவுக்கு மூக்கு தண்டு உடைந்தது, அவரது மகன் அஷ்ரப் அலிக்கு காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இது தொடர்பாக சம்பவம் நடந்த அன்றைய தினத்தில் திருவேற்காடு காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் புகார் அளித்து 15 நாள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

வழக்கின் நிலை குறித்து விசாரணை அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக வலம் வருவது தங்களுக்கு மேலும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறுகின்றனர். உடனடியாக தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டபடி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி