தொடர் கனமழை காரணமாக ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆண்டார் மடம் தரைப்பால சாலை வெள்ளநீரில் மூழ்கியது. தொடர் கனமழை காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து 5600 கன அடி/வினாடிக்கு உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரியபாளையம், ஆரணி, ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம், பெரும்பேடு, ஆண்டார் மடம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஆண்டார் மடம் பழவேற்காடு செல்லும் தரைப்பால சாலையில் வெள்ளநீர் கடந்து மூழ்கியதால், அவ்வழியாக வாகனங்கள் பொதுமக்கள் கடந்துசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளநீர் கடலில் சென்று கலக்கும் கடைசி பகுதியாக இப்பகுதி உள்ளதால், ஒவ்வொரு கனமழை காலங்களிலும் சாலை சேதமடைவதாகவும், பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக சுற்றிவர வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், நிரந்தரமாக வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் மேம்பால சாலையை அமைத்துதர வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.