சாலை விபத்துகளில் உயிர் இழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் விபத்தில் சிக்கும் பவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றும் திட்டமாக கொண்டு வரப்பட்டது இன்னுயிர் காப்போம் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த 4 லட்சாமவது பயனாளி வேலப்பன்வாடியில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இன்னுயிர் காப்போம் திட்டம் உலக அளவில் புகழ்பெற்ற திட்டமாக மாறி உள்ளதாகவும், அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் இடங்களை கண்காணித்து அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க இந்த திட்டத்தில் 250 அரசு மருத்துவமனைகளும் 423 தனியார் மருத்துவமனைகளும் என மொத்தம் 673 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு ஒரு லட்சம் வரை செலவு செய்து வந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று தற்போது 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், 365 கோடியே 2 லட்சம் செலவில் 4 லட்சம் பயனாளிகளுக்கு பயனடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல் தமிழ்நாட்டில் சாலை விபத்தில் சிக்கும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டவர்களும் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் பயனடைந்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.