திருவள்ளூர்: நினைவிடத்திற்குள் அனுமதி மறுப்பு: ரசிகர்கள் ஏமாற்றம்

எஸ்பிபியின் பிறந்த நாளில் தாமரைப்பாக்கத்தில் உள்ள நினைவிடத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் வேலி ஏறி குதித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பின்னணி பாடகர் பாடும் நிலா எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் நினைவிடம் அமைந்துள்ளது. எஸ்பிபியின் 79வது பிறந்த நாளான இன்று பல்வேறு ஊர்களில் இருந்து ரசிகர்கள் எஸ்பிபி நினைவிடத்திற்கு திரண்டு அஞ்சலி செலுத்த வந்தனர். எஸ்பிபி நினைவிடம் கட்டுமான பணிகள் காரணமாக நினைவிடத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. 

இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முறையான அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால் ரசிகர்கள் ஏமாற்றம் தவிர்க்கப்பட்டிருக்கும் என வேதனை தெரிவித்தனர். 

கடந்த ஆண்டு முதலே கட்டுமான பணிகள் நடைபெறுவதாக கூறி பேனர் வைத்துள்ளதாகவும் பிறந்த நாளன்று கூட எஸ்பிபிக்கு சென்று அஞ்சலி செலுத்த முடியாத வகையில் அவரது நினைவிடம் பூட்டப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாகவும், அவரது நினைவிடத்தை நினைவு நாளிலாவது திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். 

இதனிடையே எஸ்பிபி சமாதி கட்டுமான பணிகள் நடைபெறும் பக்கவாட்டில் உள்ள வேலியை தாண்டி சென்று ரசிகர்கள் அவரது சமாதியில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி