திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அனைத்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தொடர்ந்து கொடியேற்றி வைத்து, மறைந்த முன்னாள் சங்க நிர்வாகி படத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து வணிகர்கள் நலன் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு தமிழ்நாட்டில் இந்தி பயிலும் மாணவர்கள் எந்த அச்சுறுத்தலுமின்றி கல்வி பயின்று வருவதாகவும், அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும், மொழியை ஒன்றிய அரசு திணிக்க கூடாது என விக்கிரமராஜா வலியுறுத்தல். மாநில அரசை, ஒன்றிய அரசு அழுத்தம் தர கூடாது எனவும், மாநில அரசும், ஒன்றிய அரசும் இணக்கமாக செயல்பட வேண்டும் என கேட்டு கொண்டார். தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகைகள் வைத்திட வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் எனவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே ஆங்கில பெயர் பலகைகள் வைத்து வருவதாக சாடினார். சாலை நெருக்கடியான பகுதிகள், வணிக நிறுவனங்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகளை அகற்றிட வேண்டும் எனவும், படிப்படியாக மதுக்கடைகளை மூடிடவும், கஞ்சா, போதை மாத்திரைகளை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கேட்டு கொண்டார்.