செங்குன்றம்: இணைப்பு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் குடிநீர் இணைப்பு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர். கடந்த 10 நாட்களாக சாலையில் ஆறாக ஓடுவதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலநிலை. நடவடிக்கை எடுப்பார்களா சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள்? 

திருவள்ளூர் மாவட்டம் மாகரல் குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து செங்குன்றம் வழியாக வடசென்னை பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு பூமிக்கடியில் பைப்லைன் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் செங்குன்றம் மார்க்கெட் ஆயிஷா பள்ளிவாசல் அருகில் உள்ள ஜிஎன்டி சாலையில் கடந்த 10 நாட்களாக மதியம் 1.30 மணி முதல் இரவு 9:00 மணி வரை குடிநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதால் அவ்வழியே செல்லும் வாகனங்களும் பொதுமக்களும் வழுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 

மேலும் சாலையில் ஆறாக ஓடும் குடிநீரால் கனரக வாகனங்கள் செல்லும்போது சாலை பழுதாகி சேதம் ஏற்படும். இதுகுறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி