கருங்காலி பகுதியில் பழைய முகத்துவாரத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீருடன் மணல் அடித்து வரப்பட்டு சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. மணல் திட்டுக்களாக மாறிய சாலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர். சாலை முழுவதும் மணல் திட்டுக்களாக மாறிய நிலையில் இருசக்கர வாகனங்கள் சாலையை விட்டு அருகிலுள்ள மணலிலேயே சென்று வருகின்றன. மணலில் செல்லும் போது இருசக்கர வாகனங்கள் சிக்கிக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
புயல் போன்ற பேரிடர் காலங்களில் கடல் சீற்றம் ஏற்படும் போது அடிக்கடி இதே பாதிப்பை சந்தித்து வருவதாகவும், சுமார் 40 கிலோமீட்டர் வரை சுற்றி செல்வதால் கால விரையமும் பொருட்செலவும் அதிகரிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். போர்க்கால அடிப்படையில் சாலையில் குவிந்துள்ள மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்திற்கு நிரந்தர வழி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் உயர்மட்ட மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.