பிரபல குட்கா மன்னன் கைது: ஆவடி போலீசார் அதிரடி

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே உள்ள ஒரு மைதானத்தில் புதர் பகுதியில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அம்பத்தூர் காவல் ஆய்வாளர் டில்லி பாபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பத்தூர் போலீசார் புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட 500 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்தது யார்? எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் குட்கா வைக்கப்பட்டிருந்த புதர் அருகே போலீசார் மறைந்திருந்து கண்காணித்த போது புழல் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை பிடித்து விசாரித்ததில் கர்நாடக மாநிலத்திலிருந்து கூல்லிப், ஹான்ஸ் போன்ற குட்கா பொருட்களை கடத்தி வந்து மறைத்து வைத்திருந்ததும், அதனை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில்லறை விற்பனைக்கு கொடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவனை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய அவனது கூட்டாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கண்ணன் பிரபல குட்கா கடத்தல் மன்னன். இவன் மீது கூடுவாஞ்சேரி, குன்றத்தூர், கவரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குட்கா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி