திருவள்ளூர்: கிருஷ்ணா கால்வாயில் குழந்தைகளுடன் குளிக்கச் சென்ற தந்தை பலி

திருவள்ளூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்-44 பூண்டி அணையை சுற்றிப் பார்க்க தனது குழந்தைகளான சவிதா-14 அஸ்வின் பாலாஜி-12 இருவரை அழைத்துச் சென்றுள்ளார். பூண்டி அணை ஒட்டியுள்ள கிருஷ்ணா கால்வாயில் குழந்தைகளை கால் நனைக்க ஆசைப்பட்ட தந்தை குழந்தைகளை படியில் நிற்க வைத்துவிட்டு இறங்கிப் பார்த்தபோது பாசி வழுக்கியதில் ரமேஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் தந்தை நீரில் அடித்துச் செல்லப்பட்டது கண்ட குழந்தைகள் கதறி கூச்சலிட்டு நீரில் இறங்கியுள்ளனர். 

குழந்தைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பூண்டி நெய்வேலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழந்தைகள் கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்து கால்வாயில் குதித்து குழந்தைகளை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளார். 

இதில் ரமேஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார். பின்னர் அங்கு வந்த திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் அவரை கால்வாயில் இறங்கித் தேடியுள்ளனர். இரவு நேரம் ஆனதால் மீண்டும் இன்று காலை தீயணைப்புத் துறையினர் தேடியபோது பூண்டி அணைக்குள் அடித்துச் செல்லப்பட்டு ஏரியில் சடலமாக இருந்த அவர் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பென்னலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி