திருவள்ளூர்: எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு சென்ற லாரியில் தீ

திருவள்ளூர் அடுத்த வெங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமல் (36). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் செங்குன்றம் அருகே உள்ள பூச்சிஅத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் சரக்கு குடோனில் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள டிவி, குளிர்சாதன பெட்டி மைக்ரோவேவ் உள்ளிட்டவைகளை ஏற்றிக் கொண்டு போலிவாக்கம் பகுதியில் உள்ள குடோனுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் ரயில்வே மேம்பாலம் ஏறும்போது வாகனத்தின் இன்ஜினுக்கு கீழ் பகுதியில் புகை கிளம்பி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் வாகனம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. 

லாரி ஓட்டுநர் மேம்பாலத்தில் இறக்கத்தில் வாகனத்தை ஓரமாக நிறுத்தி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு தீயை அணைக்க தண்ணீரை ஊற்றி முயன்று கொண்டிருந்த போது விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததால் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த நிலையில் 3 ஏசி குழல் மட்டும் எரிந்து வீணானது. ஓட்டுனரின் துரிதமான செயலால் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் தப்பியது. சம்பவம் குறித்து திருவள்ளூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி