திருவள்ளூர்: அரசு விடுதியில் சமையல்காரர்களாக மாறிய மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி அரசினர் கலைக் கல்லூரி அருகில் உள்ள அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர். 

இந்த விடுதியில் ராஜபாண்டியன் என்பவர் காப்பாளராகவும், 2 பேர் சமையல் பணியாளர்களாகவும் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே காப்பாளர் மற்றும் சமையல் பணியாளர்கள் விடுதிக்கு சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களே சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர், விடுதியில் உள்ள மாணவர்கள் சமையல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

மாணவர்கள் தரப்பில் விசாரித்தபோது: - விடுதி காப்பாளர், சமையல் பணியாளர்கள் இரவில் விடுதியில் தங்குவதில்லை. இதனால் மாணவர்கள் நாங்களே சமையல் செய்து சாப்பிட்டு வருகிறோம். சமையல் செய்வதற்கான காய்கறிகள் தரமாக வழங்காமல் அழுகிய நிலையில் வழங்குகின்றனர். இதனை சமைத்து சாப்பிடுவதால் மாணவர்களுக்கு வயிற்றுவலி ஏற்படுவதாக தெரிவித்தனர். 

மேலும் திருத்தணி கோட்டத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளில் வருவாய் ஆர்டிஓ., தாசில்தார்கள் முறையாக ஆய்வு செய்வது இல்லை என குற்றச்சாட்டு முன்வைத்தனர். எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் கல்லூரி மாணவர்களின் விடுதிகளில் நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி