அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்த விழாவில், கும்மிடிப்பூண்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். யோகா பயிற்சி மையத்தின் நிறுவனரும் பயிற்சியாளருமான சந்தியா முன்னிலை வகித்தார். நோபல் உலக சாதனை தலைமை நிர்வாக அலுவலர் அரவிந்தன், சர்வதேச கால்பந்தாட்ட வீராங்கனை செளமியா நாராயணசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். நிகழ்வின் போது பயிற்சி மையத்தின் மாணவர், மாணவியர் 95 பேர், தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் புஜங்காசனம் எனும் யோகாசனத்தில் நின்று உலக சாதனை படைத்தனர்.
இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை படைத்த மாணவர், மாணவியர் மற்றும் பயிற்சியாளருக்கு உலக சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவர், மாணவியரின் யோகாசன கலை நிகழ்ச்சிகள் மற்றும் யோகா விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்தன.