நிலவொளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

நிலவொளியம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட நம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நிலவொளி அம்மன் தீமிதி திருவிழா கடந்த நான்காம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வானது நடைபெற்றது. காப்பு கட்டிய பக்தர்கள் கரகம் ஏந்தி ஊர் எல்லைகளை மிதித்து அம்மனுக்கு கூழ் வார்த்து பொங்கல் படையல் இட்டு விரதம் மேற்கொண்டு வந்தனர். தமிழ் வருட பிறப்பான 14ஆம் தேதி காலை பால்குடம் ஏந்தி நிலவொளி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இரவு சுமார் ஏழு முப்பது மணிக்கு மேல் வானவேடிக்கை மேல தாளங்கள் முழங்க மஞ்சள் ஆடை அணிந்து நிலவொளி அம்மன் ஆலயம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் நம்பாக்கம், அரியபாக்கம், கிருஷ்ணாபுரம், பூண்டி, செந்தாயன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் பென்னல்லூர் பேட்டை காவல் நிலையத்தார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி