திருவள்ளூர்: முதல்வர் வருகை; அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஆண்டார்குப்பத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏப்ரல் 19ஆம் தேதி பங்கேற்று குடிநீர் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டுகிறார். மேலும் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்குவார். மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்க ரோடு ஷோ நிகழ்ச்சியும் நடத்த உள்ளார். 

விழாவிற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பாகவும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரவும் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் சாமு நாசர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தொகுதிகளில் உள்ள பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்துப் பிரச்சினைகளையும் அதிகாரிகள் தீர்த்து வைக்க வேண்டும் என இதில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 25 நபர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் நாசர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி