பூந்தமல்லி: பூங்காவில் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு, சி.எம்.ஆர். நகர் பகுதியில் சிறுவர்கள் விளையாட்டுப் பூங்காவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மாலை திடீரென காற்று வீசி மழை பொழிந்தது. இதனால் பூங்கா முழுவதும் ஈரமாகி இருந்தது. மழை நின்றவுடன் அந்தப் பூங்காவில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு விழுந்த பந்தை எடுக்கச் சென்றபோது பூங்காவிற்குள் வைக்கப்பட்டிருந்த மின்கம்பத்திலிருந்து மின்கசிவு ஏற்பட்டிருந்த நிலையில் பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் ஒருவனுக்கு திடீரென மின்சாரம் பாய்ந்தது. 

இதனைக் கண்டதும் அவரது நண்பர் அவரை மீட்கச் சென்ற நிலையில் அந்தச் சிறுவன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தினர். இரண்டு சிறுவர்களையும் மீட்டனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த மித்ரன் (12) பலத்த காயம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப் பகுதியில் பொதுமக்கள் அனைவரும் பூங்காவில் உள்ள மின்கம்பங்களிலிருந்து மின்சார வயர்கள் பழுதடைந்து பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும், இதை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தற்போது ஒரு சிறுவன் மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி