கழுகுமலை அருகே வாலிபரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் கணேஷ்குமார் (24). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வரும் இவர் நேற்று முன்தினம் (மார்ச் 31) இரவு ஊருக்கு வடக்கே தனியார் நிலத்தில் அமைத்திருந்த கிடை காவலுக்கு இருந்தபோது, அங்கு திடீரென வந்த 2 பேர் மீது டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தபோது அந்த இருவரும் கணேஷ்குமாரை அவதூறாக பேசி கை மற்றும் கத்தியால் தாக்கினார்களாம்.
அப்போது அங்கு வந்த கணேஷ் குமாரின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரையும் சத்தம் போட்டவுடன் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடி விட்டார்களாம். காயமடைந்த கணேஷ்குமார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கணேஷ்குமார் நேற்று அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து, முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் விஜயகுமார் (24) மற்றும் 18 வயது கல்லூரி மாணவர் ஒருவரையும் கைது செய்தனர்.