தேங்காபட்டணம்: கடலில் தவறிவிழுந்து வாலிபர் பரிதாப பலி; வீடியோ

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான மக்கள் குவிந்து படகுகளை கடலுக்குள்ளும் துறைமுக முகத்துவாரப் பகுதியிலும் எடுத்துச் சென்று நேற்று (25-ம் தேதி) ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, படகில் நடனமாடிக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறிவிழுந்து மாயமானார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் கத்திக் கூச்சலிட அருகில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர்கள் கடலுக்குள் குதித்து மாயமான வாலிபரைத் தேடும் முயற்சியில் இறங்கினர். 

தொடர்ந்து குழித்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும் மீனவ மக்களுடன் சேர்ந்து இராமன்துறை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த நிர்த்தீஸ் (20) என்ற வாலிபரின் உடலை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்த தகவல் வாலிபரின் பெற்றோருக்குத் தெரியவர அங்கு வந்து அவர்கள் கதறி அழுதநிலையில் வாலிபரின் உடலை புதுக்கடை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி