நீதிமன்ற உத்தரவுப்படி ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் சந்திரகலா பேரூராட்சி தலைவராக உள்ளார். ஜோதி சேகர் துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய கோரி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு முடிவு எட்டப்படாததால், கவுன்சிலர்கள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று (ஜூலை 31) ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்ட அரங்கில் செயல் அலுவலர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து 16 வார்டு கவுன்சிலர்கள் செயல் அலுவலர் முன்னிலையில் கையெழுத்திட்டனர். 

இதனைத் தொடர்ந்து முறைப்படி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக செயல் அலுவலர் தெரிவித்தார். பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த சந்திரகலாவும், துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த ஜோதி சேகரும் இருந்து வருகின்றனர். 

அதிமுக சார்பில் ஆறு கவுன்சிலர்களும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தலா ஒரு கவுன்சிலர்களும் உள்ளனர். திமுக கவுன்சிலர்களும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி