இன்று (மார்ச் 23) விடுமுறை நாளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் வெறிச்சோடி காணப்படுகின்றது. தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது.
ஆன்மீகத் தலமாகவும் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிப்பகுதிக்கு நாள்தோறும் வெளி மாநிலங்களிலிருந்தும் மற்ற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அருவியின் நீர் பிடிப்புப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தக்காடு மற்றும் தூவானம் அணைப்பகுதியில் மழை இல்லாததால் அருவிக்கு வரும் ஆற்றில் நீர் வரத்து முற்றிலும் குறைந்து வறண்ட நிலையில் வெறும் பாறைகளாக காட்சி அளிக்கின்றது.
இதனால் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளதால் சுருளி அருவிப் பகுதி வெறிச்சோடி காணப்படுகின்றது.