தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது.
ஆன்மீகத் தலமாகவும் சுற்றுலாத்தலமாகவும் உள்ள இந்த அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் காட்டு யானை கூட்டங்கள் அருவியின் அருகே உலா வந்து தஞ்சம் அடைந்திருந்ததால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். யானைக் கூட்டங்களை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அருவியின் அருகே தஞ்சம் அடைந்திருந்த யானைக் கூட்டங்கள் வனப் பகுதிக்குள் இடம்பெயர்ந்ததால் சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்.
மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளித்து செல்வதற்கு அனுமதி அளித்துள்ளனர்.
ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து நீராடி செல்கின்றனர்.