சின்னமனூர் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் குவிப்பு

சின்னமனூர் அருகே மார்க்கையின் கோட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று(செப்.9) இரவு நேரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை சாலையில் உள்ள முல்லை பெரியாற்றில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஒரு தரப்பினர் முல்லை பெரியாற்றில் விநாயகர் சிலை கரைத்து விட்டு மீண்டும் மார்க்கையன்கோட்டை பகுதிக்கு வந்தனர், அப்போது எதிரே மற்றொரு தரப்பினார் விநாயகர் சிலையை கரைப்பதற்காக கொண்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது, இந்த மோதலின் போது ஒருவர் ஒருவர் கற்களை வீசி கடுமையாக தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டதால் பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே மார்க்கையன்கோட்டை வடக்கு தெருவில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலை பந்தலில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போடி துணை கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியை பார்வையிட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி