ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருநீலக்குடி காரைக்கால் செல்லும் பிரதான சாலையில் வசிப்பவர் சிலுவை முத்து மகன் ஜெயச்சந்திரன் (62). இவர் ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர். கடந்த மார்ச் 15 ஆம் தேதி ஜெயச்சந்திரன் குடும்பத்தாருடன் வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்றார். திங்கள்கிழமை வீட்டுக்கு வரும்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதைப் பார்த்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த எட்டரை சவரன் தங்க நகை காணவில்லை.
இதுகுறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகார் என்பேரில் உதவி ஆய்வாளர் ஆனந்தி சம்பவ இடத்தைப் பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். திருடப்பட்ட தங்க நகையின் மதிப்பு ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய் என்று போலீசார் தரப்பில் சொல்லப்பட்டது.